தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏன் தமிழகம் மழைபெறுவதில்லை? விரிவான பதிவு.
தமிழகம் தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெறுகிறது. ஆனால், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவான மழைபொழிவை பெறுகிறது. அதன் காரணத்தை அறியும் முன் தமிழகத்தின் பருவக்காலத்தை பற்றி சில தகவல்களை பார்ப்போம்.
தமிழகத்தின் ஆண்டின் சராசரி மழையளவு 914 மில்லி மீட்டர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவு வேறுபடும்.
தென்னிந்தியாவில் அதிக மழைபெறும் மாநிலம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.
அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அதிக அளவு மழையும் அதன் உள் பிரதேசங்களில் குறைந்த அளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் வடகிழக்கு பருவமழையையே அதிகம் நம்பியுள்ளது.
உதாரணமாக ஓர் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் மழை அளவு கணிசமாகக் குறைந்துவிடும்
தமிழகத்தின் மொத்த மழை அளவில் 47 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் 459.2 மில்லி மீட்டர் அளவு மழைபொழிவை பெறுகிறது தமிழகம்.
இதைத் தவிர்த்து, புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்கிறது.
தென்மேற்கு பருவமழை என்றால் என்ன? தென்மேற்கு பருவமழை என்பது அரேபிய கடலில் இருந்து தென்மேற்கு திசையில் இருந்து இந்தியாவின் முக்கிய நிலத்திற்கு பாயும் பருவ மழை.
வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் தார் பாலைவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் வெப்பமான கோடைகாலங்களில் கணிசமாக வெப்பமடைகின்றன.
இது வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் மீது குறைந்த அழுத்தப் பகுதியை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப இந்தியப் பெருங்கடல், அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவைக் கடந்து கடலில் இருந்து தரையில் காற்று வீசுகிறது.
ஈரப்பதம் நிறைந்த இந்த காற்று இமயமலை நோக்கி இழுக்கப்படுகிறது. இமயமலை ஒரு உயர்ந்த சுவர் போல செயல்படுகிறது.
மழை மேகங்கள் மத்திய ஆசியாவிற்குள் செல்வதைத் தடுக்கிறது. மேகங்களை திபெத் பகுதிக்கு செல்ல விடாமல் நீண்டு, படர்ந்த இமயமலைத் தொடர்கள் தடுத்து நிறுத்தி விடுவதால், திபெத் மழை மறைவு பிரதேசமாகி, தேவையான மழைப் பொழிவின்றி வறண்ட நிலமாக காட்சியளிக்கிறது.
மேகங்கள் உயரும்போது, அவற்றின் வெப்பநிலை குறைகிறது, மழைப்பொழிவு ஏற்படுகிறது.
தென்மேற்கு பருவமழையின் அரேபிய கடல் கிளை முதலில் இந்தியாவின் கடலோர மாநிலமான கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்குகிறது.
இதனால் இந்த பகுதி தென்மேற்கு பருவமழையிலிருந்து மழை பெறும் இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்கிறது.
மழைக்காலத்தின் இந்த கிளை மேற்குத் தொடர்ச்சி மலையின் (கொங்கன் மற்றும் கோவா) மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கே கடலோரப் பகுதிகளில் மழையுடன் வடக்கு நோக்கி நகர்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் உள்ள நிலப்பகுதிகள் மலையினால் தடுக்கப்படுவதால் அந்த நிலப்பகுதிகள் அவ்வளவு மழை பெறுவதில்லை.
இவை மழை மறைவுப் பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தின் மொத்த மழை அளவில் 32 சதவிகிதம் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கிறது.
தென்மேற்கு பருவமழை நாட்டில் ஒரு வருடத்தில் அதிக மழை பெய்யும் பருவமழை ஆகும்.
தென்மேற்குப் பருவமழையால் தமிழகம் அதிக மழைப்பொழிவைப் பெறுவதில்லை.
அதற்குக் காரணம் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகம் ஏன் மழை பெறுவதில்லை?
தென்மேற்கு பருவக் காற்று காலத்தில், அரபிக்கடலிருந்து கிளம்பும் மழை மேகங்களை, மேற்கு தொடர்ச்சி மலைகள் தடுத்து நிறுத்தி விடுகிறது.
இதனால், தமிழ்நாட்டின் திண்டுக்கல், கோயம்புத்தூர் திருப்பூர், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் போதுமான தென்மேற்கு பருவ மழை பெற இயலாது, மழை மறைவு பிரதேசங்களாக உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் தேனி பகுதியும் மறைவு பிரதேசங்கள்தான் இங்கு சாரல் மழை மட்டுமே பொழியும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாநகரம் சராசரியாக 120 மிமீ மட்டுமே மழை பொழிகிறது. நீலகிரி,கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்கள் தென்மேற்கு பருவமலை காலத்தில் கணிசமான மழையை பெறுகிறது.
மேலும்,திருநெல்வேலியில் மழை மேகங்களை அகத்தியர் மலை தடுப்பதால் திருநெல்வேலி கிழக்கு பகுதிகள் மழை மறைவு பிரதேசமாக உள்ளது.
அதிக மழையை பெறும் குமரி மாவட்டம் :
ஈரப்பதம் மிக்க அரபிக்கடல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையின் மீது மோதுவதால் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில் அமைந்துள்ள குமரி மாவட்டம் அதீத மழையை பெறுகிறது. அதே போல நீலகிரி மாவட்டமும் மலை மீது அமைந்துள்ளதால் அங்கும் நல்ல மழை பொழிகிறது. தேக்கடி குமுளி வால்பாறை மாஞ்சோலை ஊத்து மேக்கரை புளியரை செங்கோட்டை ஆகிய இடங்களும் நல்ல மழையை பெறுகிறது.
இந்தியாவிலேயே குறைவான மழையை பெறும் தூத்துக்குடி மாவட்டம் : தென்மேற்கு பருவமழைகாலத்தில் அரபிக்கடலில் இருந்து வரும் மழைமேகங்களை தென்தமிழக மலைப்பகுதிகள் தடுப்பதால் தூத்துக்குடி மாவட்டம் மழை பெறாது. குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மிக குறைவான மழையை பெறும் இடமாக திகழ்கிறது குலசேகரன்பட்டினம். தென்மேற்கு பருவமழை வலு இல்லாத காலங்களிலும் தூத்துக்குடி மாவட்டம் மழை பெறாது காரணம் ஆரல்வாய்மொழி செங்கோட்டை கணவாய் வழியாக வேகமாக காற்று வீசும் என்பதால் வெப்பசலனமழை மேகங்கள் உருவாகுவதில்லை.
கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வலுவாக இருக்கும் போது தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மழை பொழியும். அப்போது ஆரல்வாய்மொழி கணவாய் செங்கோட்டை கணவாய் மற்றும் பாலகாட்டு கணவாய் வழியாக மழைமேகங்கள் தமிழகத்திற்குள் நுழையும். அப்போது ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக வரும் மழை மேகங்கள் ராதாபுரம் சாத்தான்குளம் திருச்செந்தூர் வரை சென்று மழையை கொடுக்கும்.
செங்கோட்டை கணவாய் வழியாக உள்நுழையும் மேகங்கள் ஆலங்குளம் கயத்தாறு தூத்துக்குடி வரை சாரல் மழையை கொடுக்கும். பாலக்காடு கணவாய் வழியாக உள்நுழையும் மழை மேகங்கள் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வரை மழையை கொடுக்கும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலங்களில் தமிழகத்தின் பிறமாவட்டங்களும் மழைமறைவு பிரதேசம்தான். தென்மேற்கு பருவமழை வலுகுறைந்த நாட்களில் அதாவது தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் எப்போதெல்லாம் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைகிறதோ அப்போதேல்லாம் மதுரை திண்டுக்கல் திருச்சி வேலூர் சென்னை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெப்பசலன மழை பெய்யும்.
தென்மேற்குப் பருவமழை ஜுன் முதல் செப்டம்பர் மாதங்களில் 332.9 மில்லி மீட்டர் அளவு மழைபொழிவை பெறுகிறது தமிழகம்.
வடகிழக்குப் பருவமழை இல்லாதிருந்தால், தமிழகம் அநேகமாக இந்தியாவின் வறண்ட இடமாக இருந்திருக்கும்.
தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் தென்மேற்கு பருவக்காற்றால் குறைவான மழைபொழிவை பெறுகிறது
Comments
Post a Comment